|
ஆகமம் தந்த ஸ்ரீவிகநஸர்!
ஆகமம் தந்த ஸ்ரீவிகநஸர்!
|
Article By: கே.ஆர்.பிச்சுமணி ஐயங்கார் |
Posted on: 21/09/2011 |
Visits:1130 |
Comments:0 |
|
|
ஆகமம் தந்த ஸ்ரீவிகநஸர்!
பரம், வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என ஐந்து வகை நிலைகளில் இருந்து உலகத்தைக் காத்தருள்கிறார் மகாவிஷ்ணு. இதை வேதங்கள் உரைக்கின்றன. பரமபதத்திலும், பாற்கடலிலும் துயிலும் பரந்தாமன், மக்களைக் காப்பதற்காக மனம் இரங்கி, இவ்வுலகுக்கு இறங்கி வந்து அருள் புரிகிறான். அவ்வாறாக, இந்தப் பூவுலகில் மக்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒரே சிந்தையை ஏற்படுத்த, தன் மீதான பக்தியைப் பெருக்க வைக்க, அர்ச்சாவதாரமாக - விக்ரக உருவாக ஆலயங்களில் எழுந்தருள்கிறான்.
ஆண்டவனின் கருணையினால் அவனுக்கான ஆலயங்கள் எழுந்தன. இந்த ஆலயங்களில், இறைவனை எப்படி வழிபடுவது, எவ்வாறு பூஜைகளை மேற்கொள்வது, அவனருள் பெறுவது எப்படி என்றெல்லாம் சாதாரண மக்களுக்கும் தெரியவேண்டுமல்லவா... அதனால் அவற்றை மனிதருக்குக் கொடுக்க எண்ணியே, அவற்றை வகைப்படுத்தி அளிக்கவே விகநஸ மகாமுனியைத் தன் இதயத்தில் இருந்து தோற்றுவித்தார் மகாவிஷ்ணு. அந்த விகநஸர் அருளிய சாஸ்திரமே வைகானஸ பகவத் சாஸ்திரம் என்ப்படுகிறது.
மேலும், பகவான் படைத்த உயிரினங்கள் எல்லாம் இறை ஞானம் இல்லாது, வெறும் ஜட உயிர்களாகத் திரிந்து கொண்டிருந்த நேரத்தில், அவற்றுக்கு ஞானத்தை அளிக்க எண்ணினார் இறைவன். அந்த எண்ணம் எழுந்த மறுகணமே ஸ்ரீமகாவிஷ்ணுவின் மனத்தில் இருந்து சங்கு சக்ரதாரியாக விஷ்ணு பக்தி கொண்டவராக ஸ்ரீவிகநஸர் தோன்றினார் என்பர். இவ்வாறு ஸ்ரீ விகநஸர் காட்சியளித்தது, ஆவணி மாதம் திருவோண நட்சத்திர தினம்.
அதன்பிறகு, ஸ்ரீமந் நாராயணனே விகநஸருக்கும், பிரம்மாவுக்கும் கிரந்தங்களை உபதேசித்தார். அந்த உபதேசங்களை ரிஷி முனிவர்களுக்கு விகநஸர்
உபதேசித்தார்.
ஸ்ரீவிகநஸர் வைகுண்டத்திலிருந்து ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பூமியில் எழுந்தருளி, நைமிசாரண்யத்துக்கு எழுந்தருளி அங்குள்ள நர, நாராயணரை பூஜித்தார். பிறகு, அத்ரி, பிருகு, மரீசி, காச்யபர் ஆகிய ரிஷிகள் ஸ்ரீவிகநஸரின் சீடர்களாக இருந்து ஸ்ரீவைகாநஸ பகவத் சாஸ்திரத்தை கற்றுணர்ந்தனர். சாதாரண மனிதர்களும் கடைபிடிக்கும் விதமாக அதனைப் பகுத்தளித்தார்கள். அதன்படி இன்றளவும் ஸ்ரீவைகாநஸ சாஸ்திர முறைப்படி பல ஆலயங்களில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீவிகநஸர் விதித்தபடி ஸ்ரீவைகானஸ ஆகம வழி நடப்போர் பதினெட்டு சடங்குகளை கடைப்பிடிக்கின்றனர். தங்கள் இல்லத்திலும், ஆலயங்களிலும் விஷ்ணு பூஜைகளையும், உற்ஸவங்களையும் வைகான ஆசாரியர் விதித்த முறைப்படி செய்கின்றனர்.
பகவான் கண்ணன் கீதையில் தனக்கு மிகப் பிரியமான ஆகமமாக வைகானஸ பூஜையைச் சொல்கிறார். இந்த வைகானஸ பூஜை செய்யப்படும் சந்நிதியில் எழுந்தருளியுள்ள எம்பெருமான், மனம் மகிழ்ந்து தன்னை அண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களைத் தந்து அருள் புரிகிறார் என்பதை நாம் கண்கூடாகக் காணலாம்.
வைகானஸ பூஜை நடந்துவரும் தலங்களாக திருமலை திருப்பதி, குணசீலம், ஒப்பிலியப்பன் சந்நிதி, ஸ்ரீவில்லிபுத்தூர், தான்தோன்றிமலை எனப் பல திவ்யதேசங்களைக் கூறலாம்.
குணசீல மஹரிஷிக்கு திருவேங்கடமுடையான் காட்சியளித்த புனிதத் தலமான குணசீலத்தில், எம்பெருமானை ஆராதனை செய்யும் விதமாக ஸ்ரீவிகநஸ ஆசார்யர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீவைகாநஸ ரிஷியான குணசீல மஹரிஷியின் தவத்தினை ஏற்று கோயில் கொண்ட எம்பெருமான், ஞானவர்ம அரசனிடம் ஸ்ரீவைகாநஸர்களைக் கொண்டே தனக்கு ஆராதனம் செய்யக் கட்டளையிட்டார். அதன்படி ஸ்ரீவைகாநஸ வழிவந்த பரம்பரை அர்ச்சகர்கள் குணசீலப் பெருமானுக்கு சிரத்தையுடன் பூஜைகளைச் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவிகநஸர் பூமண்டலத்தில் பிரவேசித்த தினமான ஆவணித் திருவோணத்தில் குணசீலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிகநஸ ஆசார்யருக்கு சிறப்பாக உற்ஸவம் கொண்டாடப்படுகிறது.
விசேஷ திருமஞ்சனம், சாத்துமுறை, ததியாராதனை, புறப்பாடு முதலிய வைபவங்கள் வருடந்தோறும் நடைபெறுகின்றன. இவ்வருடம் ஆவணி-23, வெள்ளிக் கிழமை (9.9.11) அன்று நடைபெறும் உற்ஸவத்திலும் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதிக்கு நடைபெறும் பவித்ரோத்ஸவ வைபவத்திலும் அன்பர்கள் கலந்துகொண்டு அருள் பெறுங்கள்.
தரிசன தகவலுக்கு: 9486304251
**Article from Dinamani
|
|
Reviewers Comments
No Comments
|
|
|