ஐப்பசி மாதம், புனித நீராடும் மாதம். சித்திரையில் புத்தாண்டு பிறந்ததும், விஷு தீர்த்தம் ஆடுவது போல, ஐப்பசி விஷு தீர்த்தமாடுதலும் மிகவும் விசேஷம். எந்த புனித நதியிலும் நீராடலாம் என்றாலும், காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷம். ஏனெனில், இம்மாதத்தில் சிவனும், விஷ்ணுவுமே இந்த நதியில் நீராடியுள்ளனர் என்று புராணக் கதையில் சொல்லி உள்ளனர். ஐப்பசி மாதம் முழுவதுமே காவிரியில் நீராடலாம். இதை, "துலா ஸ்நானம்' என்பர். ஐப்பசியை சமஸ்கிருதத்தில், "துலா மாதம்' என்பர்.
நரகாசுரனை, ஐப்பசியில் விஷ்ணு கொன்றார். அதன் காரணமாகவே தீபாவளி பண்டிகை வந்தது. என்னதான் ஒருவன் கொடியவனே என்றாலும், அவனைக் கொல்வதால் பாவம் பற்றுவது < உறுதி. ராமபிரான் ராவணனைக் கொன்றதால், அவரை, வீரஹத்தி, பிரம்மஹத்தி, சாயாஹத்தி என்ற மூன்று தோஷங்கள் பீடித்தன. வீரனைக் கொல்வதால் வீரஹத்தியும், பிராமணனைக் கொல்வதால் பிரம்மஹத்தியும், சகல சாஸ்திரமும் அறிந்த, முகத்தில் தேஜஸுடன் திகழும் ஒருவனைக் கொல்வதால் சாயாஹத்தியும் ஒருவனைப் பீடிக்கும். இதில், வீரஹத்தி தோஷம் விலக வேதாரண்யம், பிரம்மஹத்தி விலக ராமேஸ்வரம், சாயாஹத்தி விலக பட்டீஸ்வரம் (கும்பகோணம் அருகில்) என்று, ராமபிரான் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். ராமேஸ்வரத்தைப் போல, மற்ற இரண்டு ஊர்களிலும், "ராமலிங்கம்' இருக்கிறது.
நரகாசுரனைக் கொன்றதால், விஷ்ணுவுக்கு வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் ஏற்பட்டால் உடலும், முகமும் களை இழந்து விடும். இதைப் போக்க என்ன வழி என, சிவபெருமானிடம் ஆலோசனை கேட்டார்.
"இந்த சம்பவம் நிகழ்ந்தது துலா மாதத்தில். இந்த மாதம் முழுவதும், சூரிய உதயத்தில் இருந்து, ஆறு நாழிகை (144 நிமிடம்) வரை, இவ்வுலகிலுள்ள, 66 கோடி தீர்த்தங்களும் காவிரியில் வாசம் செய்யும். அந்த நேரத்தில் அதில் நீராடினால் தோஷம் நீங்கும்...' என்றார்.
விஷ்ணுவும் அவ்வாறே நீராடி, தோஷம் நீங்கப் பெற்றார். தன் மைத்துனருடன் சிவனும் நீராட அங்கே வந்தார். சிவ விஷ்ணு தரிசனத்தை ஒரே நேரத்தில் பெற்ற மகிழ்ச்சியில், எல்லா தேவர்களும் நீராடினர். எனவே, காலை, 6:00 மணியில் இருந்து, 8:15 மணிக்குள் இந்த மாதம் முழுவதுமே காவிரியில் நீராடலாம்.
குடகில் துவங்கி, காவிரிப்பூம்பட்டினம் வரை நீண்டு ஓடும் காவிரியில், ஐப்பசி துலா ஸ்நானம் செய்ய ஏற்ற இடம் மயிலாடுதுறை. மாயூரம் என்று ஒரு காலத்தில் பெயர் இருந்தது; இதற்கு, மயில் என்று அர்த்தம். அம்பாள் மயிலாக மாறி, இறைவனை பூஜித்த தலம். இங்கு காவிரியில் உள்ள படித்துறையை இப்போது, "லாகடம்' என்கின்றனர். துலாக்கட்டம் என்ற பெயரே சரியானது. காலப்போக்கில் இது எப்படியோ சுருக்கி, "லாகட்டம்' என்றாகி, இப்போது லாகடம் ஆகி விட்டது. இந்த படித்துறையில் நீராடுவது மிகவும் விசேஷம்.
விஷ்ணுவும், சிவனும், தேவர்களும் இந்த இடத்தில் நீராடியதாக ஐதீகம். விஷ்ணுவுக்கு வீரஹத்தி நீங்கி, முகம் பொலிவு பெற்றது.
ஐப்பசி மாதப்பிறப்பன்று எல்லா சிவாலயங்களிலும், சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்வர். அன்று சிவன், காவிரி ஸ்நானம் செய்வதாக ஐதீகம். ஐப்பசி மாதத்தில் தான் தீபாவளிக்காக கங்கா ஸ்நானமும் செய்கின்றனர். முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டியும் இம்மாதத்தில் வருவதால், திருச்செந்தூரில் கடல் ஸ்நானம், நாழிக்கிணறு ஸ்நானம் விசேஷமாக இருக்கிறது. மொத்தத்தில், இது ஒரு புண்ணிய ஸ்நான மாதம். இம்மாதத்தில், ஒரு நாளேனும் இந்த இடங்களுக்குச் சென்று நீராடி வாருங்களேன்!
தி. செல்லப்பா
|