|
தீபாவளி
தீபாவளி
|
Article By: admin@srivikanasa.com |
Posted on: 23/10/2011 |
Visits:1269 |
Comments:0 |
|
|
பொறுமைக்கு இலக்கணமான பூமாதேவி, இந்த உலகின் மகிழ்ச்சிக்காக, தன் மகனின் உயிரையே தியாகம் செய்த திருநாளே தீபாவளி.
தற்போதைய அசாம், ஒரு காலத்தில் காமரூபம் என அழைக்கப்பட்டது. மிகுந்த பெருமையுடைய நாடு காமரூபம். தமிழகத்தில் காமாட்சி, மீனாட்சி என்றெல்லாம் அம்பாளின் சக்தி பீடங்கள் இருப்பது போல, வடக்கேயுள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது அசாமிலுள்ள காமாக்யா பீடம். காமாக்யாவின் பெயராலேயே அவ்வூர், காமரூபம் எனப்பட்டது. அது மட்டுமல்ல... திருமாலின் தசாவதாரங்களில் வராக அவதாரம் நிகழ்ந்ததும் இங்கு தான்.
இரண்யாட்சன் என்பவன், பூமியை ஒரு பந்தாகச் சுருட்டி, கடலுக்கடியில் ஒளிந்து கொண்டான். பூமியை மீட்பதற்காக பெருமாள் வராக (ஒற்றைக் கொம்புடைய பன்றி) அவதாரமெடுத்து, கடலுக்குள் சென்றார். இரண்யாட்சனை அழித்து, பூமிப்பந்தை, தன் கொம்பின் மீது தாங்கி கொண்டு வந்தார். பூமாதேவியுடனான இந்த ஸ்பரிசத்தால் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு, "பவுமன்' என்று பெயரிட்டனர். இதற்கு, "பூமியின் பிள்ளை' என்று பொருள். இவன் மிகவும் கறுப்பாக இருந்தான். எங்காவது இவன் சென்றால், அந்த இடமே இருட்டாகி விடும் அளவுக்கு கறுப்பு.
திருமாலின் பிள்ளை என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவன் தேவலோகம் சென்று அட்டகாசம் செய்தான். தேவலோக தலைவனான இந்திரனின் தாய் அதிதி அணிந்திருந்த குண்டலங்களைப் பறித்துக் கொண்டான். காமரூபத்தில், "ப்ராக்ஜ்யோதிஷபுரம்' என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். "ப்ராக்' என்றால், 'கிழக்கு!' "ஜ்யோதிஷபுரம்' என்றால், "ஒளிமிக்க நகரம்!' கிழக்கே சூரியன் உதிப்பதைக் கணக்கில் கொண்டு, தேசத்தின் கிழக்கிலுள்ள தன் நகருக்கு இப்படி ஒரு பெயர் வைத்தான்.
தேவலோகத்தில் அவன் செய்த அட்டூழியங்களை இந்திரன், திருமாலிடம் சொல்லவில்லை. பெரிய இடத்து வம்பு எதற்கென விட்டு, விட்டான். இப்படி, பல யுகங்கள் அவனுடைய அட்டகாசம் தொடர்ந்தது. அப்போது, கிருஷ்ணாவதாரம் எடுத்தார் திருமால். அதுவரை பொறுத்த இந்திரன், வேறு வழியின்றி நரகாசுரனைப் பற்றி புகார் செய்தான். தன் மகன் செய்த அட்டூழியம் அவருக்கே பொறுக்கவில்லை.
நரகாசுரன் ஒரு வரம் பெற்றிருந்தான். தன்னைப் பெற்ற தாயைத் தவிர, வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்பதே அந்த வரம். கிருஷ்ணாவதாரத்தின் போது, பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்திருந்தாள்; இதை, திருமால் பயன்படுத்திக் கொண்டார். நரகாசுரன் அவளது மகன் என்பதையே மறக்கும் வகையில் மாயம் செய்து, தன்னுடன் அழைத்துச் சென்றார். தேரோட்டுவதில் வல்லவளான சத்யபாமா, கிருஷ்ணருக்காக தேர் ஓட்டிச் சென்றாள்.
கிருஷ்ணருக்கும், நரகாசுரனுக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில், நரகாசுரனின் தாக்குதலில் மயங்கியது போல நடித்தார் கிருஷ்ணர். தன் கணவருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த சத்யபாமா, நரகாசுரன் மீது அம்பு விட்டார்; அவன் கீழே சாய்ந்தான். அதன் பிறகே, இறந்தது, தன் மகன் என்ற விஷயம் அவளுக்கு தெரிந்தது.
தன் மகன் கெட்டவன் என்பதை அறிந்த அவள், மனதைத் தேற்றிக் கொண்டாள். இருப்பினும், ஒருவர் இறந்து போனால், எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்திற்கேற்ப, எல்லா மக்களும் எண்ணெய் நீராட வேண்டும் என்று வரம் பெற்றாள். அந்த எண்ணெயில் லட்சுமி வாசம் செய்து, மக்களுக்கு செல்வச் செழிப்பைத் தர வேண்டுமென வேண்டினாள். சூரிய <உதயத்துக்கு, இரண்டு நாழிகை (48 நிமிடம்) முன்னதாக குளிக்க வேண்டுமென்பதால், மக்கள் ஐப்பசி குளிரில் கஷ்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன், வெந்நீரில் குளிக்க அனுமதி பெற்றுத் தந்தாள். அந்த நீரில் கங்காதேவி வசிக்க வேண்டுமென வரம் பெற்றாள். இதனால், மக்களின் பாவங்கள் தீரவும் வழி செய்தாள். லட்சுமி, நம் இல்லங்களுக்கு வரும் நாள் என்பதால் தான், தீபாவளியன்றும், மறுநாளும் குபேர பூஜை நடத்தும் வழக்கம் ஏற்பட்டது.
தீபாவளி, ஒரு தியாகத் திருநாள். இந்த நன்னாளில், உலக நன்மைக்காக தியாகம் செய்ய சித்தமாவோம். எழுதியவர்- வரகூர் நாராயணன்
***
|
|
Reviewers Comments
No Comments
|
|
|